வளர்ச்சியடைந்த நாடுகளை விடவும் வளர்முக நாடுகளில் தான் வீதி விபத்துக்கள் மிக அதிகம். குறிப்பாக இலங்கை உட்பட பல வளர்முக நாடுகளில் இவ்விபத்துகள் பெரிதும் அதிகரித்துள்ளன. அவற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் முன்னொரு- போதுமே இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
Posted on:
2017-03-23 13:39:50
வீதி விபத்துகளை குறைக்க உதவும் வரலாற்று தீர்ப்பு
இன்றைய நவீன யுகத்தில் உலக மக்கள் முகம் கொடுத்திருக்கும் பெரும் சவால் தான் வீதி விபத்துகள். அதுவும் ஒரு தொற்றா நோய் என்ற நிலையை இவ்விபத்துக்கள் அடைந்திருக்கின்றன. உலகில் அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்துகின்ற முதல் பத்து காரணிகளில் ஒன்றாக இவ்விபத்துக்கள் மாறியுள்ளன.
வளர்ச்சியடைந்த நாடுகளை விடவும் வளர்முக நாடுகளில் தான் வீதி விபத்துக்கள் மிக அதிகம். குறிப்பாக இலங்கை உட்பட பல வளர்முக நாடுகளில் இவ்விபத்துகள் பெரிதும் அதிகரித்துள்ளன. அவற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் முன்னொரு- போதுமே இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அத்தோடு வீதி விபத்து காயங்களுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையும், நிரந்தர ஊனங்களுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையும் கூட அதிகரித்தே காணப்படுகின்றது.
இதன் விளைவாக இந்நாட்டில் வருடமொன்றிற்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதுடன், இருபத்தையாயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைகின்றனர். அதாவது நாளொன்றுக்கு ஆறு, ஏழு பேர் வீதி விபத்துகளால் இந்நாட்டில் உயிரிழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்தடிப்படையில் வீதி போக்குவரத்து பொலிஸ் பிரிவின் தகவலின் படி, 2016 ஆம் ஆண்டில் சுமார் 2400 பேர் வீதி விபத்துகளால் கொல்லப்பட்டுள்ளதுடன், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்வாறு வீதி விபத்துகள் அதிகரித்து செல்வதும், அதிகரித்து காணப்படுவதும் மனித சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. ஏனெனில் இவ்விபத்து-களால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள் மற்றும் காயங்களால் ஏற்படும் செலவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. அத்தோடு இவ்விபத்துகள் ஏற்படுத்தும் மறைமுகப் பாதிப்புக்களும் எண்ணிலடங்காதவை. வீதி விபத்து-கள் குடும்பங்களைக் கூட நிர்க்கதிக்கு உள்ளாக்கும் பண்பையும் கொண்டிருக்கின்றது.
இவ்வாறு மிக மோசமான விளைவுகளைக் கொண்டதாக விளங்கும் இவ்வீதி விபத்துகள் முன்னொரு போதுமே இல்லாத அளவுக்கு இன்றைய நவீன யுகத்தில் அதிகரித்துள்ளது. வீதி விபத்துகள் இவ்வாறான நிலையை அடைந்திருப்பதற்கு சாரதிகளின் பங்களிப்பே பிரதானமானது. அவர்கள் வாகனங்களைப் பொறுப்பற்ற விதத்தில் செலுத்துதல் தான் வீதி விபத்துகள் அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. இது பரவலாக அவதானிக்கப்பட்டுள்ள உண்மையாகும்.
குறிப்பாக வீதி ஒழுங்குகளை மதியாது வாகனங்களை செலுத்துதல், வாகனங்களை முந்திச் செல்ல முயற்சி செய்தல், போட்டிக்கு வாகனத்தை செலுத்துதல், மதுபானம் அருந்திய நிலையில் வாகனத்தை செலுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களினால் தான் வீதி விபத்துகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதற்கு நிறையவே உதாரணங்கள் உள்ளன. அவற்றில் குருநாகல், யாங்கல்மோதர ரயில் கடவையில் பயணிகள் பஸ் வண்டிமோதி விபத்துக்கு உள்ளான கோர சம்பவம் நல்ல உதாரணமாகும்
ஆனால் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறு-ப்பை சுமந்தவர்களே சாரதிகள். இதனை உணர்ந்தவர்களாக ஒவ்வொரு சாரதியும் செயற்பட வேண்டும். அதேநேரம் வீதிப் போக்குவரத்து சட்ட ஒழுங்குகளை மதித்து செயற்படக் கூடியவர்களாக சாரதிகளைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையும் பரவலாக உணரப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் குருநாகல் - மடகல்ல வீதியிலுள்ள தியாவ என்ற இடத்தில் 2003 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 04 ஆம் திகதி இலங்கை போக்குவரத்து சபையின் குருநாகல் வடக்கு டிப்போவுக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று விபத்துக்கு உள்ளானதில் 14 பேர் கொல்லப்பட்டு, 19 பேர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு நேற்று முன்தினம் குருநாகல் மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தரவினால் வழங்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் பஸ் சாரதி கவனயீனமாக வாகனத்தை செலுத்தி இந்த உயிரிழப்புக்களையும், காயப்படுத்தல்களையும் ஏற்படுத்தியுள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டது. அதனடிப்படையில் தண்டனைச் சட்டக் கோவையின் 296 வது ஷரத்தின் படி, இச்சாரதிக்கு 37 1/2 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இவ்வாகன விபத்தில் கொல்லப்பட்ட 14 பேருக்கும் ஒருவருக்கு இரண்டு வருடங்கள் படி 28 வருடங்கள் என்றபடியும், காயமடைந்தவர்களுக்கு ஒருவருக்கு ஆறு மாதங்கள் படி 19 பேருக்கு-ம் 9 1/2 வருடங்கள் என்றபடியும் மொத்தமாக 37 1/2 வருட கால சிறைத் தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பை மக்கள் வரவேற்கின்றனர். 'இது வாகன சாரதிகளை பொறுப்புணர்வோடும், முன்னவதானத்தோடும் வாகனங்களை செலுத்த பெரிதும் உதவும்' என்பது மக்களின் அபிப்பிராயமாகும். இன்றைய காலகட்டத்தில் அதுவே மிக அவசியமான தேவையாக மாறியுள்ளது.
அதேநேரம் இந்நாட்டின் அண்மைக் கால வரலாற்றில் இது மிக முக்கியத்து-வம் மிக்க தீர்ப்பாகும். நாளுக்கு நாள் வீதி விபத்துக்கள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் வழங்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பு சாரதிகளை பொறுப்புணர்வோடும் முன்னவதானத்தோடும் வாகனத்தை செலுத்த வழிவகுக்கும். அதன் மூலம் வீதி விபத்துகள் குறைவடையவும் துணைபுரியும்.